17-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: நாகையில் கடலில் பால் ஊற்றியும், படையலிட்டும் உறவினர்கள் அஞ்சலி
நாகப்பட்டினம்:
தமிழகத்தின் கடலோர கிராமங்களை சூறையாடி பல ஆயிரம் உயிர்களை பறித்து சென்ற சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,060 பேர் உயிரிழந்தனர்.
சுனாமி சூறையாடி விட்டுச் சென்று 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றாலும் தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் சுனாமி ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னமும் மாறவில்லை.
நாகை, வேளாங்கண்ணி. மாவட்டத்தில் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக உயிரிழந்தவர்களை அடுக்கி வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் உயிர் பதைபதைக்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் படையலிட்டு பால் ஊற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதைப்போல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் நினைவு ஸ்தூபி முன்பு சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மவுன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் உறவினர்கள், மீனவர்கள் இன்று கடற்கரையில் குவிந்து கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர். மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.