உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட பிரேம்குமார், அவரது தாய் கஸ்தூரி

கிட்னி பாதிப்பால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை - வேதனையில் தாயும் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபம்

Published On 2021-12-26 13:33 IST   |   Update On 2021-12-26 13:33:00 IST
பர்கூர் அருகே உடல்நலக்குறைவால் வாலிபரும் வேதனையில் அவரது தாயாரும் வி‌ஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் அருகே எமக்கல் நத்தம் சாலையில் வசித்து வருபவர் பூபதி (வயது 50). இவர் ஐதராபாத்தில் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் .

இவரது மனைவி கஸ்தூரி (45). இவர்களுக்கு பிரேம்குமார் (23), புனித் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் பிரேம் குமாருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது . இதனால் அவர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு மாற்று கிட்னி பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அவரது தாயிடமிருந்து கிட்னி பெற்று பிரேம் குமாருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அந்த நேரத்தில் பிரேம் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் பிரேம் குமாருக்கு மாற்று கிட்னி பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த பிரேம்குமார் நேற்று இரவு தனது வீட்டில் வி‌ஷத்தை குடித்தார். மகன் வி‌ஷம் அருந்தி மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்த தாய் கஸ்தூரி வேதனை அடைந்து அவரும் வி‌ஷத்தை குடித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த கஸ்தூரியின் இரண்டாவது மகன் புனித் தனது தாயும், அண்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரி மற்றும் அவரது மகன் பிரேம்குமார் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Similar News