உள்ளூர் செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில், விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும்- அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

Published On 2021-12-20 10:19 GMT   |   Update On 2021-12-20 10:19 GMT
கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர்:

கரூரில் நாமக்கல் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் தலைமையில் நடைபெற்றது.

மாநில மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து, பின்னர் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது, இங்கு வந்து இருக்கிறவர்களுக்கு அரசு வேலைக்கு செல்லவேண்டும் என்று எண்ணம் இருக்கும். இதற்கான தீர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நமக்கு உருவாக்கித் தருவார்கள். அதற்கு நாங்கள் உங்களுடன் துணை நிற்போம். உங்கள் அரசுவேலை பெறும் நாட்கள் மிக விரைவாக அமையும்.

கரூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பிற மாவட்டங்களுக்கும் அல்லது பிறமாநிலங்களுக்கும் சென்று வரும் செலவை நாங்கள் ஏற்கிறோம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். அதே போல் அடிப்படை கல்வியில் ஏதேனும் தேவைப்படுமாயின் அதை செய்வதற்காக மாவட்ட நிர்வாகமும், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட் இன் தமிழ்நாடு என்ற அடிப்படையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வளர்ச்சி பெற்ற பிற மாவட்டங்களுக்கு இணையாக முதன்மை மாவட்டமாக வளரவேண்டும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்கா அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்போம், முதல்வர் அனுமதி வழங்குவார். அதன் மூலம் கரூர் மாவட்டத்தில் படித்தவர்கள் இங்கேயே ஐடி துறையில் பணிபுரியலாம். மேட் இன் கரூர் என்ற நோக்கத்தோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். உலகெங்கும் செல்லும் பொழுது கரூர் என்ற பெயர் நமக்கு பெருமை தரக்கூடிய வகையில் இருக்கவேண்டும் அதற்காக நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றார்.

கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி முன்னிலை வகித்து பேசியது, கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளிதான் திறன். அனைவரும் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது மொழியாக இருக்கலாம். நாம் நினைப்பதை வெளிப்படுத்த மொழித்திறன் அவசியம். இங்கு சரிபாதி பெண்கள் வந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. வாழ்க்கையில் தடைகள் உருவாக்கப்படும். தடைகளை உடைத்து படிக்கட்டுகளாக மாற்றி திறமையால் வென்றிடவேண்டும் என்றார்.

எம்.எல்.ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஓ.செ.குணசேகரன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்புலட்சுமி, ஜெயராம் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆர். ராமசாமி மற்றும் தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 155 நிறுவனங்கள் பங்கேற்று 5,000 பணியிடத்திற்கு நேர்முகத்தேர்வை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து தேர்வானவர்களுக்கு பணியானைகளை வழங்கப்பட்டன.
Tags:    

Similar News