உள்ளூர் செய்திகள்
விபத்து

அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்- 3 கொத்தனார்கள் படுகாயம்

Published On 2021-12-16 09:32 IST   |   Update On 2021-12-16 09:32:00 IST
ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 கொத்தனார்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர்கள் இளையராஜா (வயது 33), ராஜேந்திரன் (34), கார்த்திகேயன் (31). கொத்தனார்களான இவர்கள் 3 பேரும் ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு 10 மணியளவில் சூரியமணல் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிற்பக் கலைக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பஸ்சின் முன்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதில் கொத்தனார்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, பாதுகாப்பு படையினர் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் இளையராஜா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார், பஸ் டிரைவர் குமாரை(52) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News