உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

எரிந்த ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்கள் வெட்டி எடுப்பு

Published On 2021-12-13 09:49 IST   |   Update On 2021-12-13 10:54:00 IST
விமான படையினர், ராணுவத்தினர் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிறு சிறு பொருட்களையும் ஆய்வு செய்து சேகரித்து வருகிறார்கள்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

முப்படைகளின் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங் மற்றும் விசாரணை குழுவினர் கடந்த 3 நாட்களாக விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டும், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விபத்து நடந்த பகுதி யை ராணுவம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சீல் வைத்து எரிந்த ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியை முழுவதும் ஆய்வு செய்த ராணுவ, விமானபடையினர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொண்டு வந்த பொருட்கள், அதிகாரிகளின் துப்பாக்கிகள் மற்றும் செல்போன்களின் பாகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மீட்டு கொண்டு சென்றனர். மேலும் அங்குள்ள, செடி, கொடி, இலைகளில் படர்ந்திருந்த ரத்த கறைகள் போன்றவற்றையும் சேகரித்தனர்.

இதேபோல் எரிந்த ஹெலிகாப்டரின் பல பாகங்களும் தனித்தனியாக மீட்கப்பட்டு எம்.ஆர்.சி மற்றும் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நேற்றும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லீப் என்றழைக்கப்படும், ரோட்டார் மீட்பு பணி நடந்தது. நிலத்தின் மீது மோதிய நிலையில் இருந்த மெயின் ரோட்டார்(இறக்கைகளை இணைக்க கூடிய மையபகுதி), பிளேட், மாஸ்ட் ஆகியவற்றை கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.

மேலும் விமானபடையினர், ராணுவத்தினர் அந்த பகுதியில் உள்ள சிறு, சிறு பொருட்களையும் ஆய்வு செய்து சேகரித்து வருகிறார்கள். சில பாகங்கள் கட்டர் மிஷினால் உடைக்கப்பட்டும் மீட்கப்பட்டன.

Similar News