உள்ளூர் செய்திகள்
விபத்து நடந்த பகுதியில் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட காட்சி.

ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்தவரின் செல்போன் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது

Published On 2021-12-12 09:20 IST   |   Update On 2021-12-12 09:20:00 IST
ஹெலிகாப்டர் விபத்து நடந்த அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத் த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

நேற்று ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஸ்வர் சிங், நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முப்படைகளின் வீரர்களும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களை சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மரங்களை வெட்டி உதவி செய்கின்றனர்.

மேலும் சேகரித்த உதிரிபாகங்களை பாதுகாப்புடன் உடைக்க வெல்டிங் எந்திரங்களும் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன், குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீ காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி இருந்ததா? அவை சேதமாகி உள்ளதா? என்பது குறித்து அறிய மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதவிர மீட்கப்பட்ட சேதமடைந்த ஹெலிகாப்டர் பாகங்களை மீண்டும் வடிவமைத்து, அதில் எந்த பாகங்கள் இல்லை என்பதையும், அதனை தேடும் பணியில் இறங்கவும் விசாரணை குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.




இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் போன்ற காட்சிகளும், பின்னர் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ தான் ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோவாகும். இதனை முக்கிய ஆதாரமாக கருதிய போலீசார் அந்த வீடியோவை எடுத்தவர்கள் யார் என விசாரித்தபோது, கோவையை சேர்ந்த ஜோ மற்றும் அவரது நண்பர் நாசர் ஆகியோர் கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் அந்த வீடியோவை எடுத்ததாகவும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர்.

முப்படைத்தளபதி சென்ற அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதால் போலீசார் இதனை முக்கிய ஆதாரமாக கருதினர். இதையடுத்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார், நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த நாசரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும் விசாரணையை தீவிரப்படுத்த தமிழக காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Similar News