உள்ளூர் செய்திகள்
ரெயில்

மயிலாடுதுறையில் பயணிகள் ரெயில்கள் படிப்படியாக இயக்கப்படும்- தென்னக ரெயில்வே பொது மேலாளர் பேட்டி

Published On 2021-12-10 14:33 IST   |   Update On 2021-12-10 14:33:00 IST
மயிலாடுதுறை ஜங்‌ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை ரெயில்வே ஜங்‌ஷனில் தென்னக மேலாளர் ஜான் தாமஸ், திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிஎம்ஐ சரிபார்க்கும் எந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு வந்து பொதுமேலாளரிடம் எம்.எல்.ஏ.ராஜகுமார் திருச்சி-சென்னை சோழன் விரைவு ரெயிலை ஜனசதாப்தி விரைவு ரெயிலாக மாற்றி தினமும் 2 முறை சென்னை சென்றுவர இயக்கவும், நாகூர்- பெங்களூரு பாசஞ்சர் ரெயில், மயிலாடுதுறை- விழுப்புரம், திருச்சி பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் தென்னக மேலாளர் ஜான்தாமஸ் கூறுகையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை ஆய்வு பணிகளை மேற்கொள்வதாகவும், தொற்று பரவலால் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

தற்போது ஒமிக்ரான் பரவி வருகிறது. தொற்று குறைந்த பிறகு அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால்-பேரளம் ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2022-23-ம் ஆண்டு நிறைவு பெறும்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும். மயிலாடுதுறை ஜங்‌ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உடன் ரெயில்வே அதிகாரிகள் இருந்தனர்.

Similar News