நாட்டுபற்றுடன் இருப்பதே இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி - தமிழிசை சவுந்தரராஜன்
குன்னூர்:
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடல்களுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்த தகவல் அறிந்ததும் எனது நெஞ்சமே நொறுங்கி விட்டது. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகவே நான் ஓடோடி இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்.
நாட்டு பற்றுடன் இருப்பதே நாம் இறந்தவர்களுக்கு செலுத்த கூடிய உண்மையான அஞ்சலி. முப்படை தலைமை தளபதி எந்நேரமும், நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியவர் ஆவார்.
இந்த விபத்தில் சிக்கி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங்கையும் நேரில் பார்த்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரக்கூடிய சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் அவர் காப்பாற்ற பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.