உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட முதலை

கொள்ளிடம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

Published On 2021-12-06 10:04 GMT   |   Update On 2021-12-06 10:04 GMT
சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள குளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை இன்று காலை வனத்துறையினரால் பிடிபட்டது

சீர்காழி:

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும்போது கரையோர கிராமங்களில் உள்ள குளங்கள், ஊர்களில் முதலை தண்ணீரோடு புகுந்து வந்துவிடுவது வழக்கம். அதன்படி கொள்ளிடம் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்ற பொதுமக்கள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மக்கள் நடமாட்டத்தால் முதலை உடனடியாக தண்ணீருக்குள் சென்றுவிட்டது. கொள்ளிடம் ஆற்று நீரில் அடித்துவரப்பட்ட முதலை வடிகால், வாய்க்கால் வழியாக புகுந்து குளத்திற்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குளங்களில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி சப்-கலெக்டர் நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவரின் அறிவுறுத்தலின்படி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு முதலை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குளம் அருகே வலைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதலை வலையில் சிக்கிபிடிபட்டது. பிடிபட்ட முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்று பகுதியில் கொண்டுவிட பணியில் ஈடுபட்டனர்.சோதியகுடி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News