உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது எடுத்த படம்.

தா.பழூரில் 16 கடைகளில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2021-12-03 13:54 IST   |   Update On 2021-12-03 13:54:00 IST
தா.பழூர் கடைவீதியில் நடத்தப்பட்ட சோதனையில் 16 கடைகளில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர் கடைவீதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது 16 கடைகளில் இருந்து 500 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News