உள்ளூர் செய்திகள்
வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2021-12-02 14:37 IST   |   Update On 2021-12-02 14:37:00 IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (‌வயது 33) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தனது தாயுடன் கடலை பறித்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக அழைத்து சென்றுள்ளார். வழியில் உணவு பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்ற அவர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதனைகேட்டு அதிா்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.

Similar News