செய்திகள்
கோப்புபடம்

நூல் விலை கட்டுப்பாடு, மானியம் - பா.ஜ.க., வியாபாரிகள் வலியுறுத்தல்

Published On 2021-11-29 06:10 GMT   |   Update On 2021-11-29 06:10 GMT
நூல் விலை உயர்வு என்பது வியாபாரத்தின் ஒரு பகுதியல்ல. நாட்டின் வளர்ச்சி, தொழிலாளர் வாழ்வாதாரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.
திருப்பூர்:

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பின்னலாடைத் துறையினருக்கு தமிழக முதல்வர் மானியம் வழங்க வேண்டும் என பா.ஜ.க., வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து பா.ஜ.க., மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் வளர்ச்சிக்காக இனிவரும் காலங்களில் நடக்கும் அனைத்து அறவழி போராட்டத்துக்கும் பா.ஜ.க., துணை நிற்கும். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்பினருக்கும் நன்றி. 

திருப்பூருக்கு வந்திருந்த தேசிய தலைவர் நட்டா, மாநில  தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனிடம், பா.ஜ.க., சார்பில் இதுதொடர்பாக கவன ஈர்ப்பு கடிதம் அளித்துள்ளோம். 

நூல்விலை உயர்வு என்பது வியாபாரத்தின் ஒரு பகுதியல்ல. நாட்டின் வளர்ச்சி, தொழிலாளர் வாழ்வாதாரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும். அதற்காக பா.ஜ.க., நூல் விலை குறைய இயன்ற அளவு முயற்சி எடுத்து வருகிறது.  

திருப்பூரின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி. எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நூல் விலை உயர்வை சமாளிக்க, மானியம் வழங்க வேண்டும். விரைவில் மின் கட்டணத்தில் இருந்தும் சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகிஷா டி.ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:&

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும், நூல்வியாபாரிகளும், விசைத்தறி உரிமையாளர்களும் நூல் சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களின் சார்பிலும் நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். 

நூல்விலை உயர்வால் பின்னலாடை தொழில் மிகவும் பாதிக்கப்படும். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் இதனை நம்பி உள்ள பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் .

கொரோனா பிடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்த நேரத்தில் நூல் விலையும் உயர்ந்து அனைத்து தொழிலும் பாதிப்படைந்து மிகவும் மோசமான நிலைமைக்கு திருப்பூர் மாவட்டம் சென்றுவிடும். எனவே தற்காலிக நடவடிக்கையாக நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய-மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும். 

மேலும் உரிய பரிசீலனை செய்து இதற்கு ஒரு நல்ல தீர்வை உடனடியாக எடுத்து பின்னலாடை நிறுவனங்களையும், தொழிலாளர்களையும், இதனை நம்பி வாழும் வியாபாரிகளையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News