செய்திகள்
கோப்புபடம்

அவிநாசி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் ஆழ்துளை ஆழம் குறைப்பு

Published On 2021-11-28 07:29 GMT   |   Update On 2021-11-28 07:29 GMT
அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு பல நாட்களில் பலத்த மழை பெய்தது.
அவிநாசி:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அவிநாசி, அன்னூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கு பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்படுகிறது.

அவிநாசியில் உள்ள முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம், கருமாபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், கருவலூர், ராமநாதபுரம் என 7 ஊராட்சிகளை இணைத்து ரூ.55கோடி செலவில் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான பூமி பூஜை கடந்தாண்டு நவம்பர் 26-ந்தேதி முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் முறியாண்டம்பாளையம் ஊராட்சியில்  மட்டும் 9 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 3லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி,15கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவுற்று வெள்ளோட்டம் பார்க்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இப்பணி நிறைவுற்றால் தினசரி 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். மக்களின் தண்ணீர் தேவை    தன்னிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு பல நாட்களில் பலத்த மழை பெய்தது. மழையால் தத்தனூர், முறியாண்டம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

தத்தனூரில் நெசவாளர்களின் வீடுகளில் தோண்டப்பட்டிருந்த தறிக்குழியில் தண்ணீர் ஊற்றெடுக்கும் அளவுக்குமழை பெய்தது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய வறட்சியால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

நீர்நிலைகள் வறண்டதால் மக்கள் தண்ணீருக்கு  அலை மோதினர். இதனால் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில்  நீரோட்டம் உள்ள இடங்களில் போர்வெல்  தோண்டப்பட்டது. அதிகபட்சம் 1000 முதல் 1200 அடி ஆழத்திற்கு போர்வெல் தோண்டப்பட்டு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது.

சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததில் வெறும் 50 முதல் 100அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தத்தனூர், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட சுற்றியுள்ள ஊராட்சிகளில் போர்வெல் ஆழத்தை குறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1000அடிக்கும் கீழ் தோண்டப்பட்டு பதிக்கப்பட்ட குழாய்கள் வெறும் 300 முதல் 500அடி வரை  மேல் எழுப்பி பொருத்தப்படுகின்றன. வரும் காலங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தை தக்கவைக்க கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டை  உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கி  வைக்க கிராமஊராட்சிகள் முனைப்பு காட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News