செய்திகள்
மழை

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை- 105 வீடுகள் இடிந்தன

Published On 2021-11-27 10:19 GMT   |   Update On 2021-11-27 10:19 GMT
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளான அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் அந்த பகுதியில் உள்ள கானாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரக்கோணம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. விடிந்த பிறகும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

நேற்று ஒரே நாளில் மழையால் வேலூர் மாவட்டத்தில் 105 வீடுகள் இடிந்தன. இதில் 9 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இதுவரை பருவமழையால் இடிந்த வீடுகள் எண்ணிக்கை 860 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 38 முகாம்களில் 3 ஆயிரத்து 914 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் அனைத்து தகுதிகளும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

பொன்னையாற்றில் 3 ஆயிரத்து 863 கன அடியும் பாலாற்றில் 11,787 கனஅடி வெள்ளம் பாய்ந்து செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் ஆறுகளில் வேடிக்கை பார்க்க, குளிக்க பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது பல இடங்களில் மழை பெய்தது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நேற்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 82 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News