திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் மயம் - சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு
சென்னை:
சென்னையில் மீண்டும் பெய்த கனமழையால் திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் மயமாகவே காட்சி அளிக்கிறது.
மழை வெள்ளம் வடிந்து சில நாட்கள் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்த மழை காரணமாக சென்னை மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.
எப்போது மழை வெள்ளம் வடியும் என்று காத்திருந்த மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் வெயிலும் அடித்தது. இதனால் மழை நீர் வேகமாகவும் வடிந்தது.
ஆனால் மீண்டும் சென்னை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி உள்ள தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடங்கி உள்ளனர். ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய வெள்ளம் வடிவதற்கு 2 வாரத்துக்கு மேல் ஆகி விட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெள்ளம் தேங்கி இருப்பது சென்னை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெள்ள நீர் வடிவதற்கு மேலும் 2 வாரங்கள் ஆகிவிடும் என்பதால் அதுவரை மழை வெள்ளத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் பலர் விழி பிதுங்கி உள்ளனர்.
மழை நீர் அதிகம் உள்ள இடங்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு சென்றுள்ள நிலையில் மேலும் சிலர் நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
மழை நீர் வடிந்த பிறகே மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.