செய்திகள்
கோப்புப்படம்

சென்னைக்கு 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை

Update: 2021-11-24 08:03 GMT
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது தாமதமாகி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை.

அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆகிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (25-ந்தேதி) ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.வருகிற 26-ந்தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர் சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27-ந்தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் போடிநாயக்கனூர், ராமநாதபுரம் கே.வி.கே. பகுதியில் தலா 13 செ.மீ மழையும், சங்கரன்கோவிலில் 6 செ.மீ, ராமேஸ்வரம், கூடலூர், வீரபாண்டி, ஆயிக்குடி, கடலாடி, ஆழியார் சூரங்குடியில் தலா 5 செ.மீ, தேக்கடியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

வாலினோக்கம், திருவாடானை, மாயனூர் மண்டபம், முதுகுளத்தூர், ராமநாதபுரம், பாம்பன், கொடுமுடி, சிவகாசி, கழுகுமலை, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காயல்பட்டினம், ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

24, 25-ந்தேதிகளில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 26-ந்தேதி தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

27, 28-ந்தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News