செய்திகள்
சேதமடைந்ததால் சீரணி அரங்கத்தில் செயல்படும் பள்ளி வகுப்பறை - புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
சேதமடைந்ததால் சீரணி அரங்கத்தில் பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எஸ்.புதூர்:
எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இங்குள்ள 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடம் பழுதடைந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் வகுப்புகள் நடத்த இயலாமல், அங்குள்ள சீரணி அரங்கத்தில் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் கூறினார்.
தற்போது பெய்து வரும் தொடர்மழையை கருத்தில் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் அமைத்து தருமாறு ஊராட்சி தலைவர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.