செய்திகள்
சாலை மறியல்

தொடர் மழை: வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-11-18 11:29 GMT   |   Update On 2021-11-18 11:29 GMT
ஆம்பூரில் தொடர் மழையால் ஏரி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழையினால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரத்தில் உள்ள பெரிய ஏரி மற்றும் சிறிய ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேறி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் தூர்ந்து போனதால் அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் அதனை சுற்றியுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் வாகனங்கள் வரிசையாக நின்றது.

உமராபாத் போலீசார் விரைந்து சென்று அம்பேத்கர் நகர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News