செய்திகள்
மழைவிட்டு 4 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது
மழைவிட்டு 4 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. கடந்த 10-ந் தேதி காலை மழை விட்டது. நேற்றுடன் 4 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை.
மாவட்டத்தில் பெருபாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நட்ட சம்பா நெற்பயிர்கள், நடவு செய்ய வேண்டிய பாய் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால், பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வாராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே வடிகால்களை தற்காலிகமாக தூர்வாரி மழைநீரை வடிகட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.