செய்திகள்
கோப்புபடம்

ஆடைகள் விலை உயர்வு நாளை முதல் அமல்

Published On 2021-11-14 07:33 GMT   |   Update On 2021-11-14 07:33 GMT
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிலானது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
திருப்பூர்:

நூல் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு பின்னலாடை விலையை 20 சதவீதம் வரை உயர்த்த சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி  தொழிலானது கொரோனா நோய்  தொற்றின் 2-வது அலையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன்பிறகு தற்போது ஓரளவுக்கு மீண்டு வரும் நிலையில் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை திடீரென கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் காரணமாக பின்னலாடை தொழிலும், அதனை  சார்ந்த உப தொழில்களும் தங்களுடைய கூலி கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதனிடையே  பின்னலாடை தொழிலாளர்களுக்கான ஊதியமும் உயர்த்தி அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே பின்னலாடைகளுக்கான விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நிலையில்  சங்க செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் பின்னலாடைகளுக்கான விலையை நாளை 15-ந்தேதி முதல் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே சங்க உறுப்பினர்கள் தங்களுடைய நிறுவனத்தில் உற்பத்தி செலவுகள், பின்னலாடைகளின் தரம் மற்றும் தங்களுடைய வியாபார எல்லை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்தி கொள்ளலாம்.

அதேவேளையில் தாங்கள் நிர்ணயிக்கும் நியாயமான விலை உயர்வு, பின்னலாடை வியாபாரிகளுக்கும், பின்னலாடை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News