செய்திகள்
தேவகோட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்- போக்குவரத்து பாதிப்பு
கடந்த 2 நாட்களுக்கு மேலாக வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழ்ந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேவகோட்டை:
பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் சென்ற ஆண்டுகளை விட அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தேவகோட்டை முப்பையூர் அருகே கற்களத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுவாகுடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழ்ந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மழைநீர் செல்ல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மதுரை-தொண்டி சாலையில் இன்று காலை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் சாலையில் இருபுறங்களிலும் நின்றன.
இதனை அறிந்த தேவகோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் மழைநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இன்று மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.