செய்திகள்
சாலையில் தேங்கி உள்ள மழை நீர்

சென்னையில் 36 சாலைகளில் மழை நீர் வடியாமல் தேங்கி உள்ளது

Published On 2021-11-12 15:16 IST   |   Update On 2021-11-12 15:16:00 IST
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும், இலகுரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்மேரீஸ் சாலை வழியாகவும் செல்கின்றன.
சென்னை:

சென்னையில் கொட்டி தீர்த்த கன மழையால் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி இருக்கிறது.

இன்று காலை வரையில் சென்னையில் உள்ள 36 சாலைகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. ஈ.வி.ஆர்.சாலை-அழகப்பா சாலை சந்திப்பு, கால்நடை மருத்துவமனை, பிரிக்கிளின் சாலை, மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு (முழுமையாக மூடப்பட்டுள்ளது), சிவசாமி சாலை, ராஜரத்தினம் விளையாட்டு மைதானம், வள்ளுவர் கோட்டம், பள்ளிக்கூட சாலை, ஸ்டெர்லிங் சாலை (லயோலா கல்லூரி வரை), டி.டி.கே.சாலை, எல்டாம்ஸ் சாலை, வடபழனி ராம் தியேட்டர், சூளைமேடு பெரியார்பாதை, 100 அடி சாலை பல்லவா மருத்துவமனை, வடக்கு உஸ்மான் ரோடு பசுல்லா சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

வாணிமகால் ஜி.என். செட்டி ரோடு, அருணாச்சல சாலை, காமராஜ் சாலை, கஸ்தூரிபா நகர், கற்பகா தோட்டம் பகுதி, விஜயா நகர், மடிப்பாக்கம் சதாசிவம் நகர், குளோபல் மருத்துவமனை அருகில் உள்ள சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது.

இந்த சாலைகளில் போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் சென்னையில் உள்ள 8 முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் ஜவகர் பகுதி, பெரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணிக்கூண்டு, விசாயர்பாடி முல்லைநகர் பாலம், பள்ளிக்கரணை 200 அடி சாலை, சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளிக்கரணை 200 அடி சாலையில் மாநகர பஸ்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் மஞ்சப்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் இன்னொரு பக்கம் உள்ள சாலை வழியாக சென்று வருகின்றன.

வடபழனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும், இலகுரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்மேரீஸ் சாலை வழியாகவும் செல்கின்றன.

சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காக்கன் சுரங்கப்பாதையில் இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்கள் மட்டும் சென்று வருகின்றன.
Tags:    

Similar News