செய்திகள்
பல்லடத்தில் சாலையோர மணல்குவியல் அகற்றம்
தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலை எண் 81-ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். '
மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சாலையோரத்தில் பரவிக்கிடக்கும் மண்ணால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். சாலையின் இரண்டு புறங்களிலும் மண்குவியல் உள்ளது. வேகமாக வரும் பஸ் மற்றும் லாரிகளுக்கு வழிவிட இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் ஒதுங்கும் போது மண்ணில் சறுக்கி விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே சாலையின் இரண்டு புறங்களிலும் காணப்படும் மண்ணை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி பணியாளர்கள் சாலை ஓரங்களில் உள்ள மண்ணை அகற்றி சுத்தம் செய்தனர்.