செய்திகள்
சாலை மறியல்

அரக்கோணம் அருகே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-11-09 13:16 GMT   |   Update On 2021-11-09 13:16 GMT
அரக்கோணம் அருகே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழைவெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அரக்கோணம் - திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே நாகலம்மன் நகர் பகுதியில் திடீரென பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கைனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் இங்குள்ள கால்வாய் வழியாக வடமாம்பாக்கம் ஏரிக்கு சென்றடையும்.

ஆனால் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வெளியேராமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தரமாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வரையில் மறியலை கைவிடமாட்டோம் என்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News