செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- 2 பேர் கைது

Published On 2021-11-02 11:01 GMT   |   Update On 2021-11-02 11:01 GMT
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:

வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வற்புறுத்தியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை சுகுமார் (46) ஒட்டினார்.

நேற்று இரவு 9 மணியளவில் பஸ், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் வேட்டையம்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது 2 பேர் திடீரென வழிமறித்து பஸ் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசினர். இதில் கண்ணாடி நொறுங்கி சேதமானது.

இதுகுறித்து பஸ் டிரைவர் சுகுமார், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் கண்ணாடியை உடைத்தது, ஆலமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி (33), வேட்டையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (32) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரும் கட்டிட மேஸ்திரிகள் ஆவர்.

வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர்.

வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தருமபுரி 4 ரோடு, நல்லம்பள்ளி, ஏரியூர், பொம்மிடி, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், மற்றும் சாலைமறியல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News