செய்திகள்
அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியின் உள்ளே இறங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டதை காணலாம்

கீழடியில் அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published On 2021-10-20 03:25 GMT   |   Update On 2021-10-20 03:25 GMT
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அந்த குழிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று முடிந்த 7-ம் கட்ட அகழாய்வு தளத்தை தமிழக தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.

அகழாய்வு குழிகளுக்குள் இறங்கியும் பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை பார்வையிட்டு, அதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

7-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற குழிகளை மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. அகழாய்வு குழிகளை திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன்முறை.

பழங்கால கட்டுமானங்கள், செங்கல் கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் உதவியை கேட்க உள்ளோம்.

8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை எப்போது தொடங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News