செய்திகள்
உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடக்கும் காட்சி.

ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2021-10-18 11:01 IST   |   Update On 2021-10-18 11:01:00 IST
ஈரோட்டில் நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு பழைய பாளையம் ஓடை பகுதியில் சக்தி மாரியம்மன், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

நேற்று கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு இரவு வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் அம்மன் சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் பூசாரி கோவில் நடையைத் திறக்க வந்தார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 8 மாதத்துக்கு முன்பும் இந்த கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் தற்போது 2-வது முறையாக மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News