செய்திகள்
மரணம்

அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Update: 2021-10-16 10:39 GMT
அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது கணவர் நடராஜன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தனது மகன் ராமலிங்கத்துடன் உஞ்சினி ஏரிக்கரையில் பழனியம்மாள் வசித்து வந்தார்.

இவர்கள் இருவரும் பெண்ணாடம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் தங்கி, கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பழனியம்மாள். தனக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத வீட்டிற்கு அருகில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அண்மையில் பெய்த கனமழையால் அந்த சுவர் சேதமடைந்து இருந்துள்ளது.

இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பழனியம்மாள் திரும்பி வராததால், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சேதமடைந்த வீட்டில் இடிந்து விழுந்திருந்த மண்ணை அப்புறப்படுத்தும் போது பழனியம்மாள் மண்ணில் இறந்த நிலையில் புதைந்து இருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பழனியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News