செய்திகள்
வீடுகளை சூழ்ந்த மழைவெள்ளம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-10-15 11:29 GMT   |   Update On 2021-10-15 11:29 GMT
பல ஆண்டுகளாக செங்கோட்டையன் நகர் பகுதியில் முறையாக சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகள் முன்பு தேங்கி உள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியில் நேற்று மதியம் 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. மேலும் கோபி சுற்றுவட்டார பகுதிகளான பாரியூர், கரட்டூர், கொளப்பலூர், கெட்டி சேவியூர், காசிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது.

கனமழை காரணமாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆயுத பூஜை என்பதால் பூஜை பொருட்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றதால் பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

பலத்த மழை காரணமாக கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் நகர் என்ற பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக செங்கோட்டையன் நகர் பகுதியில் முறையாக சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகள் முன்பு தேங்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வி‌ஷ ஜந்துக்கள் ஊர்ந்து வரும் அபாயம் உள்ளது.

வீடுகளின் முன்பு தேங்கி உள்ள மழை நீரில் கழிவு நீரும் கலந்து உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் குழாயை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் தண்ணீர் பிடிக்கவும் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இது போன்று மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது.

எனவே எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி செய்து கொடுத்து மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடி பகுதியில் 80 மி.மீ. மழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான இடங்கள் மற்றும் வயல் வெளிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. மழையின் காரணமாக ஆயுத பூஜை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கவுந்தப்பாடி-80, கோபி-34. பவானி-18, குண்டேரிபள்ளம்-12, நம்பியூர்-4, ஈரோடு-4.

Tags:    

Similar News