செய்திகள்
மீன் மார்க்கெட்டில் மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தபோது எடுத்த படம்.

திருப்புவனத்தில் அதிகாரிகள் சோதனை - அழுகிய மீன்கள் பறிமுதல்

Published On 2021-10-11 12:40 GMT   |   Update On 2021-10-11 12:40 GMT
திருப்புவனத்தில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்புவனம்:

திருப்புவனம் நகர் பகுதியில் மீன் கடை, கோழிக்கடை, கறிக்கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் நகரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது என உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்புவனத்தில் இறைச்சி கடைகள் அதிகம் செயல்பட்டன.

இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பிரபாவதி, மீன்வளத்துறை ஆய்வாளர் சோபியா, திருப்பு வனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாண்டி, ராஜேந்திரன் உள்பட பலர் சேதுபதி நகர் எதிரே உள்ள மீன் மார்க்கெட் பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அங்குள்ள பல கடைகளில் மீன்களை சோதனை செய்ததில் உண்ணத்தகாத அழுகிய மீன்கள் சுமார் 10 கிலோவை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பிறகு மீன் வியாபாரிகளிடம் அனைவரும் நல்ல மீன்களை விற்க வேண்டும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக் கூடாது, மீறி விற்பனை செய்தால் கடை நடத்த அனுமதி தர மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் திருப்புவனம் தெப்பகுளம் அருகே செயல்படும் இறைச்சிக்கடை, மீன் கடைகளை ஆய்வு செய்தும் வியாபாரி களிடம் நல்ல உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பிளாஸ்டிக் பயன் படுத்திய 4 கடைகளில் 8 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் முககவசம் அணியாமல் இருந்த 5 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News