செய்திகள்
கைது

தேவகோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2021-10-10 09:24 GMT   |   Update On 2021-10-10 09:24 GMT
தேவகோட்டையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை ஈயோலிவயலை சேர்ந்த கணேசன் மகன் சக்தி (வயது29).

நேற்று மாலை இவர் ஜீவா நகர் நாடகமேடை அருகே இருசக்கர வாகனத்தில் தேவகோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை சிதம்பர நாதபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் வன்மீக நாதன் (31) வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் அரிவாளை எடுத்து சக்தியை வெட்ட முயன்றபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதில் அருகில் நின்று கொண்டிருந்த வன்மீக நாதனின் நண்பர் ஆனையடி வயலை சேர்ந்த சுரேசுக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை நகர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று வன்மீக நாதனை கைது செய்தார்.அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை கண்ணன்கோட்டை அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு வன்மீகநாதன் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது குடிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த சக்திக்கும், வன்மீக நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை நினைத்து வன்மீகநாதன் அதிக அளவில் மது குடித்து வந்தார். மேலும் சக்தியை கொலை செய்யும் நோக்கத்தோடு அரிவாளை எடுத்துக் கொண்டு நேற்று சென்றார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி தப்பினார்.

வன்மீநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதே டாஸ்மாக் கடையில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் மது அருந்த வரும் நபர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேவகோட்டை நகர் காவல் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் போலீசார் குறைந்த அளவே பணியில் உள்ளனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க அவர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து காவலர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News