செய்திகள்
வடவாறு ஆற்றங்கரையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மீன்சுருட்டி அருகே உள்ள வடவாறு ஆற்றங்கரையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கொள்ளிடம் கீழணை உள்ளது. இந்த கீழணையில் இருந்து வடவாறு என்னும் ஆறு பிரிந்து செல்கிறது. இந்த கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாகத்தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வடவாறு தலைப்பில் தான் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன.
குறிப்பாக சென்னை, புதுச்சேரி, கடலூர், வேலூர், காஞ்சீபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், ராஜமன்னார்குடி போன்ற அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்லும். இந்த பஸ் நிறுத்தத்திற்கு தங்களது குழந்தைகளுடன் வரும் பஸ் பயணிகளில் சிலர் பஸ் வருவதற்கு முன்னதாக அருகில் உள்ள வடவாற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
அதேபோல, உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் பொழுது போக்கிற்காக இங்கு வந்து செல்கிறார்கள். ஆற்றில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. தற்போது வடவாற்றில் தண்ணீர் செல்வதையும், மீன்பிடிப்பதை பார்ப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வருகின்றனர்.இந்த வடவாற்றின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால் வேடிக்கை பார்ப்பதற்காக வரும் பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள் கால் தவறி விழுந்தால் ஆற்றில் தான் விழ வேண்டும். இதனால், பலர் தங்களது குழந்தைகளின் கைகளை இறுக பற்றிக் கொள்கிறார்கள்.
ஆகவே, ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன், இந்த ஆற்றின் இரண்டு புறமும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.