செய்திகள்
பாமக

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க. முடிவு

Published On 2021-09-29 08:34 GMT   |   Update On 2021-09-29 08:34 GMT
புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெற்றிருந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. புதுவையில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. இடம்பெற்றது. பா.ம.க. இடம்பெறவில்லை.

இந்த நிலையில் புதுவை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க. ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு, புதுவையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறது. புதுவையில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கூட்டணி தலைவரான ரங்கசாமி, பா.ம.க.வை அழைக்கவில்லை.

இதன் காரணம் தெரியவில்லை. புதுவை உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை.

இச்சூழலில் கூட்டணிக்கு காத்திருக்காமல் பா.ம.க. தேர்தல் பணிகளை தொடங்குகிறது. அனைத்து இடங்களிலும் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக்குழுவில் எடுத்த முடிவுகள் கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News