செய்திகள்
கோப்புபடம்

துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் கைது

Published On 2021-09-27 18:10 IST   |   Update On 2021-09-27 18:10:00 IST
வேதாரண்யம் அருகே துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தில் ஒரு வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் புஷ்பவனத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் வேங்கடவரதன் (வயது25) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் பட்டாசு வெடிக்க தனியாக ஆள் வைத்திருக்கிறோம். நீங்கள் ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வேங்கடவரதன், அவர்களை தாக்க முயன்றார். அதை பார்த்த அதே ஊரை சேர்ந்த விவசாயியான காளிமுத்து (47) என்பவர் தடுக்க முயன்றார். இதனால் வேங்கடவரதன் தான் வைத்திருந்த கத்தியால் காளிமுத்துவை குத்தினார்.

இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேங்கடவரதன் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்து செய்தனர்.

Similar News