செய்திகள்
பஸ்

புதுச்சேரி-நாகர்கோவில் இடையே மீண்டும் பஸ் சேவை- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-09-23 02:44 GMT   |   Update On 2021-09-23 02:44 GMT
புதுச்சேரி- நாகர்கோவில் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காரைக்கால், மாகி, ஏனாம், குமுளி, நாகர்கோவில், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ் கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம், வேப்பூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது. புதுவையில் உள்ள மக்கள் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

கொரோனா பரவல் காரணமாக வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நோய் தாக்கம் தற்போது குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்கால், குமுளி ஆகிய ஊர்களுக்கு மட்டும் பஸ்கள் இயங்கப்படுகிறது. நாகர்கோவில், மாகிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் இருந்து தென்தமிழகத்திற்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லை.

புதுச்சேரி, கடலூர் பகுதியில் வசிக்கும் தென் தமிழக மக்கள் விழுப்புரம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் இருந்து வரும் பஸ்கள் பெரும்பாலும் இருக்கைகள் முழுவதும் நிரம்பி தான் வருகிறது. பல பஸ்கள் விழுப்புரம் உள்ளே வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.

புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கூட இன்னும் இயக்கப்படவில்லை. எனவே புதுச்சேரி பகுதியை சேர்ந்த மக்கள் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல வேண்டும் என்றால் விழுப்புரம், திருச்சி, மதுரை போன்ற ஒவ்வொரு ஊராக மாறி, மாறி செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு செல்பவர்கள், முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனவே புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News