செய்திகள்
கோப்புபடம்

வில்லியனூர் அருகே மதுக்கடையில் மோதல் - டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து

Published On 2021-09-15 11:25 GMT   |   Update On 2021-09-15 11:25 GMT
வில்லியனூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே அரியூர் அனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது37). இவர் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

தற்போது கொரோனா காரணமாக வேலை இல்லாமல் ராஜா வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் சிவராந்தகத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மதுக்குடிக்க சென்றார். அங்கு ஏற்கனவே ராஜாவின் நண்பரான அன்பு மற்றும் செந்தில் ஆகியோர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அன்பு அழைக்கவே ராஜா அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் செந்தில் சிகரெட்டை பிடித்து ராஜாவின் முகத்தில் ஊதினார். இதையடுத்து ராஜா வயது வித்தியாசம் இல்லாமல் என் முகத்தில் ஏன் சிகரெட்டை பிடித்து ஊதுகிறாய் என கேட்டார்.

அப்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்பு இருவரையும் சமாதானம் செய்தார். இதைத்தொடர்ந்து ராஜாவிடம் அன்பு பீர் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு தன்னிடம் இப்போது காசு இல்லை என்று ராஜா தெரிவித்தார்.

அப்போது செந்தில் குறுக்கிட்டு இவனிடம் ஏன் பீர் கேட்கிறாய் என கூறி ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் இப்போதுதான் ஜெயில் இருந்து வந்துள்ளேன் என்னிடம் மோதினால் நடப்பதே வேறு என்று கூறி அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராஜாவின் தலையில் குத்தினார். மேலும் கையிலும் பீர் பாட்டில் குத்து விழுந்தது.

உடனே ராஜா அலறல் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் ஒன்று திரளவே செந்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாவை அவரது நண்பர் அன்பு மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News