செய்திகள்
பிடிபட்ட முதலையை படத்தில் காணலாம்.

குளிக்க சென்ற 2 பேரை கடித்து குதறிய முதலைகள்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2021-09-07 08:16 IST   |   Update On 2021-09-07 08:16:00 IST
சிதம்பரம், குமராட்சியில் குளிக்க சென்ற 2 பேரை முதலைகள் கடித்து குதறின. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமதுரை மகன் வேல்முருகன் (வயது 45). இவருடைய வீட்டின் அருகில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் வேல்முருகனின் தம்பி விவசாயி ராஜீவ்காந்தி(35) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக சென்றார்.

அவா் தண்ணீருக்குள் இறங்கியபோது, அங்கு முதலை ஒன்று வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்துக் கொண்டு குட்டையில் இருந்து வெளியே ஓடினார்.

ஆனால் அதற்குள் அந்த முதலை ராஜீவ்காந்தியை பிடித்து, கடித்து குதறியது. இதில் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் முதலையிடம் இருந்து சாமா்த்தியமாக தப்பிய ராஜீவ்காந்தி, ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதி பொதுமக்கள் அந்த குட்டைக்கு ஒன்று திரண்டு சென்றனா். பின்னா் குட்டைக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த முதலையை பிடித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முதலையை கைப்பற்றினா். பின்னா் அதனை பிடித்து பாதுகாப்பாக வக்காரமாரி நீர்த்தேக்கத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றொரு சம்பவம்...

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள தவர்த்தான்பட்டு குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 48). தொழிலாளியான இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் இருந்த முதலை ஒன்று மாரியப்பனை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முதலையை விரட்டி மாரியப்பனை மீட்டனர். பின்னர் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வடக்கு ராஜன் வாய்க்காலில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அவைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கின்றன. எனவே அவற்றை பிடித்து நீர்த்தேக்கத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News