செய்திகள்
அங்கன்வாடி மையத்தில் ஜன்னல் உடைக்கப்பட்டிருக்கும் காட்சி.

அங்கன்வாடிமையத்தில் ஜன்னலை உடைத்து அரிசி, பருப்பு-பாத்திரங்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

Published On 2021-09-04 14:33 IST   |   Update On 2021-09-04 14:33:00 IST
அங்கன்வாடி மையத்தில் புகுந்து பாத்திரங்கள் மற்றும் அரிசி பருப்புகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்திலிருந்து குழந்தைகள் நேற்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் அங்கன்வாடி மையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த பாத்திரங்கள் மற்றும் அரிசி பருப்புகளை கொள்ளையடித்து கொண்டு மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அங்கன்வாடி மையத்தில் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சோழதரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கொள்ளை நடந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கன்வாடி மையத்தில் புகுந்து பாத்திரங்கள் மற்றும் அரிசி பருப்புகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News