செய்திகள்
வீட்டில் பள்ளம் தோண்டி பூஜை செய்யப்பட்டிருந்த காட்சி.

புதையல் இருப்பதாக வீட்டில் பள்ளம் தோண்டி நள்ளிரவில் பூஜை- குழந்தையை நரபலி கொடுக்க முயற்சியா?

Published On 2021-08-26 11:18 IST   |   Update On 2021-08-26 11:18:00 IST
அரக்கோணம் அருகே பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீட்டில் நள்ளிரவில் பூஜை நடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருகே உள்ள கிழவனம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிழவனத்தில் உள்ள வீட்டை பூட்டிக்கொண்டு தற்போது வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் ஒரு குழந்தை மற்றும் சிலருடன் கிழவனம் வந்த ஆசீர்வாதம் பூட்டி கிடந்த வீட்டை திறந்து உள்ளே சென்று பூஜைகள் செய்தனர்.

மேலும் வீட்டிற்குள் பள்ளம் தோண்டியுள்ளனர். நள்ளிரவில் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து பூஜைகள் நடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டிற்குள் புதையல் இருக்கலாம் அதற்காக குழந்தையை அழைத்து வந்து நரபலி கொடுப்பதற்காக பள்ளம் தோண்டி பூஜை செய்கின்றார்களா? என்று சந்தேகமடைந்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பூஜையில் ஈடுபட்ட ஆசீர்வாதத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3-வது மகளின் கணவர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார். அதனால் மகளை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக கூலி ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீடு ஆண்டு கணக்கில் பூட்டிக் கிடந்ததால் பேய் இருக்கலாம் என்று மந்திரவாதி ஒருவர் கூறினார் அதனால் நள்ளிரவில் பூஜை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பகலில் வீட்டை சுத்தம் செய்யாமல் நள்ளிரவில் என் வீட்டை சுத்தம் செய்தீர்கள்? புதையல் எடுப்பதற்காக குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News