செய்திகள்
பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை படத்தில் காணலாம்.

புதுப்பேட்டை அருகே ஊராட்சி செயலாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை

Published On 2021-08-25 16:08 IST   |   Update On 2021-08-25 16:08:00 IST
புதுப்பேட்டை அருகே ஊராட்சி செயலாளர் வீட்டில் 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை:

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50).ஊராட்சி செயலாளர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு சென்றார். அங்கு விழா முடிந்ததும் மாலையில் அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பாலசுப்பிரமணியன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News