செய்திகள்
வீராணம் ஏரி

நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது

Published On 2021-08-21 11:37 IST   |   Update On 2021-08-21 11:37:00 IST
வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரத்தொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,574 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து 1,623 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.28 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 45.87 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

வீராணம் ஏரிக்கு இதேபோல் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் நாளைக்குள் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News