செய்திகள்
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை படத்தில் காணலாம்.

போக்குவரத்து நெரிசலை தீர்க்க திருப்பூர் பென்னிகாம்பவுண்ட் வீதி அடைப்பு

Published On 2021-08-19 15:19 IST   |   Update On 2021-08-19 15:19:00 IST
வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருப்பதால் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் குமரன் சாலை மற்றும் டவுன் ஹால் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக குமரன் சாலை உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மாலை  6 மணிக்குள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் காலை நேரத்தில் கடைவீதிகளுக்கு வந்து செல்கிறார்கள். அதுபோல் தொழில் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் காலை நேரத்தில் செல்வதால்  குமரன் சாலையில்  வாகன நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் அங்கு வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருப்பதால் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். 

இந்தநிலையில் குமரன் சாலை போக்குவரத்து சிக்னல் அருகே 4 சந்திப்பில் உள்ள பென்னிகாம்பவுண்ட்  வீதியில் போக்குவரத்து போலீசார் இருபுறமும் தடுப்புகள் வைத்து அடைத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:

குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலால் புஷ்பா தியேட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அந்த வகையிலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் நெருக்கடி இல்லாமல் செல்லும் வகையிலும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் பென்னிகாம்பவுண்ட் வீதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Similar News