செய்திகள்
கோப்புபடம்

இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய விவசாயிகளுக்கு அபராதம்

Published On 2021-08-19 14:57 IST   |   Update On 2021-08-19 14:57:00 IST
பல்லடம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம் தாலுகாக்களில் மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம்:

விவசாயிகளின் நிதி சுமையை குறைக்கவும், தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிர்சாகுபடி செய்கிறார்கள். இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி கூறியதாவது:-

பல்லடம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம் தாலுகாக்களில் மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குண்டடம் வடக்கு, தாராபுரம், வடக்கு தாராபுரம், ஜல்லிப்பட்டி, மடத்துப்பாளையம், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 விவசாயிகள் இலவச மின்சாரத்தை திருடி கோழிப் பண்ணைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. 

மேலும் 2 விவசாயிகள் இலவச மின்சாரத்தை திருடி ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 விவசாயிகளுக்கும் ரூ.6 லட்சத்து 19 ஆயிரத்து 908 அபராதம் விதிக்கபட்டது. எனவே மின்நுகர்வோர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் தவறான மின் உபயோகம் மற்றும் மின் திருட்டு சம்பந்தமான புகார்களை பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News