செய்திகள்
வேப்பூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மனைவியிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
வேப்பூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் மனைவியிடம் 4 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
வேப்பூர்:
வேப்பூர் அருகே உள்ள பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 59). அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மகேஸ்வரி(55), மகள் கல்பனா(21) ஆகியோருடன் வீட்டின் முன்பக்கம் உள்ள வரண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மகேஸ்வரி திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதைகேட்டு எழுந்த கொளஞ்சி தப்பியோடிய மர்மநபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கொளஞ்சியை தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கொளஞ்சி வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயகீர்த்தி வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு நகையை பறிகொடுத்த மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.