செய்திகள்
கோப்புபடம்

மாமியார் வீட்டின் முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த அரசு பஸ் டிரைவர்

Published On 2021-08-13 15:36 IST   |   Update On 2021-08-13 15:36:00 IST
புவனகிரி அருகே மனைவி கோபித்து சென்றதால் மாமியார் வீட்டின் முன்பு விஷம் குடித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ (30) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வார் இதை அவரது மனைவி கண்டித்ததால் கணவன்- மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயஸ்ரீ அவரது கணவரிடம் கோபித்து கொண்டு சாவடி நத்தம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வெங்கடேசன் அவரது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வெங்கடேசன் மாமியார் வீட்டின் முன்பு நின்று அவர் வைத்திருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News