செய்திகள்
பெண் போலீசாருக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதி தேர்வில் ஒரு பெண் நீளம் தாண்டிய போது எடுத்த படம்.

காட்பாடியில் பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு

Published On 2021-08-11 17:12 IST   |   Update On 2021-08-11 17:12:00 IST
பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு 354 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானம் முன்பு திரண்டனர்.
காட்பாடி:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந்தேதி தொடங்கியது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில், 1,610 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினத்துடன் அவர்களுக்கு உடல் தகுதி தேர்வுகள் நிறைவு பெற்றது.

பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு 354 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானம் முன்பு திரண்டனர்.

வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக நேதாஜி மைதானத்தில் மழைநீர் குளம்போல தேங்கி கிடந்தது.

இதனால் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்கள் தேர்வு செய்யும் பணி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டது.

நேதாஜி மைதானத்திற்கு வந்த பெண்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் வி.ஐ.டி. பல்கலைக்கழக மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வைத்து உடற்தகுதி தேர்வுகள் நடந்தது.

குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றின் மூலம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

காவலர் தேர்வு நடப்பதால் வி.ஐ.டி. பல்கலைக்கழக மைதானத்தில் மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதியாக மருத்துவ பரிசோதனை மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News