செய்திகள்
கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே, மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுரை கூறினர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.
மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வசதியாக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைதோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்த புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
அந்த வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைத்து, மனு கொடுக்க வந்த மக்களை போலீசார் வழிமறித்தனர். பின்னர் கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே, மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுரை கூறினர்.
இதையடுத்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அச்சமடைந்து, மனு அளிக்காமலே திரும்பி சென்றதையும் காண முடிந்தது.