செய்திகள்
மக்களை தேடி மருத்துவம்

புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்

Published On 2021-08-06 11:30 GMT   |   Update On 2021-08-06 11:30 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வி.கோட்டையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்கிற சிறப்பான திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் 2006-2011 ஆட்சிக் காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்பொழுது அதைவிட கூடுதலாக கலைஞர் வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி முகாம்களை அனுப்புகின்ற பணியை செயல்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைத்துள்ளார்.

தற்பொழுது இல்லங்கள் தோறும் நேரடியாக சென்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் படிப்படியாக செயல்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இத்திட்டத்தை பொது மக்கள் உரிய முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் பொது சுகாதாரத்துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு (எ)சிதம்பரம், வளர்மதி, ஊராட்சி மன்றத் தலைவர் ராமதிலகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் முதன் முதலில் திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கிவைத்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைக்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்தினார். அவரின் தொடர்ச்சியாக தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி மக்களின் வரவேற்பை பெற்று உள்ளார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா- ராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் மருத்துவ வாகனத்தின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பொது சுகாதார துணை இயக்குனர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆனந்த் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்டம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டமானது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை மேலும் முன்னெடுத்து செல்லும் வகையில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களுக்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

அதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 17 துணை சுகாதார நிலையத்திலும் இத்திட்டம் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில், 1,60,135 மக்கள் தொகை கொண்ட கடுகூர் வட்டாரத்தில் வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில், கடுகூர் வட்டாரத்தில் 5,136 நோயாளிகளில், ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்ட 2,077 நோயாளிகளுக்கும், 2,335 சர்க்கரை நோயாளிகளுக்கும், 724 ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளும், நோய்க்கான மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் நமது மாவட்டத்தில் நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் பிசியோதெரபிஸ்ட் மூலம் (கை, கால் அசைவு) 70 நபர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும், வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 713 மக்கள் தொகையில் 13 நபர்களுக்கு தொற்றா நோய்க்கான மருந்து மற்றும் 4 நபர்களுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் (கை கால் அசைவு) சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடுகூர் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பணி நாட்களில் (செவ்வாய்க்கிழமை தவிர) பெண் களப்பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு கீழ் உள்ள உடல் குன்றிய நோயாளிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

பின்னர், பிசியோதெரபி சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, பொது மக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த் காந்தி, கோட்டாட்சியர் ஏழுமலை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News