செய்திகள்
கவுசல்யா

வரதட்சணை கொடுமை: பெண்ணை தூக்கில் தொங்கவிட்டு கணவர்-மாமியார் தப்பி ஓட்டம்

Published On 2021-08-05 14:33 GMT   |   Update On 2021-08-05 14:33 GMT
கறம்பக்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்து தூக்கில் தொங்கவிட்டு கணவர்-மாமியார் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடி:

தஞ்சாவூர் மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இடையாத்தி பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா மகன் அய்யப்பன். இவருக்கும் கவுசல்யாவுக்கும் கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4½ வருடங்களாக கணவனும், மாமியாரும் சேர்ந்து கவுசல்யாவை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கவுசல்யா கந்தர்வகோட்டை அருகே மட்டங்காள் பகுதியில் உள்ள தனது தந்தை ரவி வீட்டிற்கு சென்றார்.

கடந்த ஆடிப்பெருக்கு அன்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்த கணவர் அய்யப்பன் மீண்டும் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி உள்ளார். இதற்கு அய்யப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் உள்ள உத்திரத்தில் கவுசல்யாவை தூக்கில் தொங்க விட்டதோடு கதவை பூட்டி விட்டு இருவரும் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் கவுசல்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாண்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனாலும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வராததால் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கறம்பக்குடி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்.டி.ஒ. இரவு 9 மணி அளவில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கவுசல்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக இரவு 9.30 மணியளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். வாண்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News