செய்திகள்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வார விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியபோது எடுத்த படம்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-08-05 15:37 IST   |   Update On 2021-08-05 15:37:00 IST
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை இந்திய வர்த்தக குழும கட்டிடத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு குழும மாவட்ட தலைவர் சிவசக்திரவி தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரவடிவேலு, பொருளாளர் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல் முககவசம் அணியாமல் வணிக நிறுவனங்கங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை முககவசம் அணிய வற்புறுத்த வேண்டும். வருவாய்த்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து அனைத்து வணிகநிறுவனங்களையும் கண்காணிப்பார்கள். தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வணிக நிறுவனங்களை மூடுவது குறித்து பரிசீலனையில் உள்ளது. தேவை ஏற்பட்டால் இந்த 2 நாட்கள் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும். எனவே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி கலெக்டர் மணிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News